×

இந்திய வேகங்களின் அசத்தலான பந்துவீச்சே வெற்றிக்கு காரணம்: கேப்டன் ரோகித்சர்மா பேட்டி

கேப் டவுன்: தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா 55 ரன்னிலும், இதையடுத்து ஆடிய இந்திய அணி 153 ரன்களிலும் சுருண்டது. இதனையடுத்து 98 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய தென்ஆப்பிரிக்க அணி 176 ரன்களுக்கு ஆட்டம் இழக்க 79 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து வெற்றி பெற்றது. இதன் மூலம் 1-1 என்ற கணக்கில் தொடரை இந்தியா சமன் செய்தது. இந்த வெற்றி குறித்து கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது: மிகப்பெரிய வெற்றியாக இதை கருதுகிறோம். முதல் டெஸ்டில் தோல்வி அடைந்ததிலிருந்து நிறைய பாடங்களை கற்றுக் கொண்டோம். 2வது டெஸ்டில் எங்களது பவுலர்கள் பிரமாதமாக செயல்பட்டனர். எங்கள் வீரர்கள் பல திட்டங்களை தீட்டி அதற்கான பரிசுகளை தற்போது பெற்றிருக்கின்றனர். எங்களை நம்பி நாங்கள் விளையாடினோம். முதல் இன்னிங்சில் 100 ரன்களுக்கு மேல் முன்னிலை பெற நினைத்தோம்.

ஆனால் கடைசி 6 விக்கெட் இழந்த விதம் நிச்சயம் வருத்தத்தை கொடுத்தது. இந்த போட்டி மிகவும் குறுகிய போட்டியாக தான் இருக்கும் என நினைத்தோம். இதனால் ஒவ்வொரு இன்னிங்சும் மிகவும் முக்கியம் என்பதை உணர்ந்தோம். இந்த போட்டியில் முன்னிலை பெறுவது என்பது மிகவும் முக்கியமாக இருந்தது. சிராஜ் இந்த ஆட்டத்தின் முதல் இன்னிங்சில் செயல்பட்ட விதம் ஸ்பெஷலானது. இதை நாம் தினம் தினம் பார்க்க முடியாது. நாங்கள் இந்த போட்டியை சிம்பிளாக தான் எதிர்கொண்டோம். மைதானமும் எங்களுக்கு நன்றாக ஒத்துழைத்தது. எங்களது பவுலர்கள் சிராஜ், பும்ரா, முகேஷ் மற்றும் பிரசித் கிருஷ்ணா என அனைவருக்கும் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். தென்ஆப்பிரிக்காவுக்கு யார் வந்தாலும் இது கடும் சவால்களை கொடுக்கும் மைதானமாக இருக்கிறது.

இந்தியாவுக்கு வெளியே தற்போது நாங்கள் நல்ல கிரிக்கெட்டை விளையாடி வருகிறோம். இதனை நினைக்கும்போது எனக்கு பெருமையாக இருக்கிறது. இந்த தொடரை நாங்கள் வென்று எடுக்க முயற்சி செய்தோம். ஆனால் தென்ஆப்பிரிக்கா உண்மையிலேயே சிறந்த அணி. அவர்கள் கடும் சவால்களை கொடுத்தார்கள். ஒரு நல்ல அணியை எதிர்கொண்டு தொடரை சமன் செய்தது திருப்தி அளிக்கிறது. டீன் ஏல்கர் தென்னாபிரிக்க அணியின் மிக முக்கியமான வீரராக இருந்தார். அவரது ஓய்வு வாழ்க்கை சிறந்ததாக அமைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். தென் ஆப்பிரிக்க கேப்டன் டீன் எல்கர் கூறுகையில், “இந்தப் போட்டி கடினமான ஒன்றாக இருந்தது. போட்டிக்கு வரும் முன் நேர்மறையாக வந்தோம். ஆனால், முதல் இன்னிங்ஸ் பேட்டிங் எங்களை முடித்துவிட்டது.

இந்திய வீரர்கள் சிறப்பாக பந்துவீசினர். சூழ்நிலைகளை வெகுவாக பயன்படுத்திக் கொண்டது. ஆனாலும், டெஸ்ட் தொடர் 1 – 1 என டிரா ஆகி இருக்கிறது. 2 – 0 என தொடர் முடிந்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனாலும் 1 – 1 என தொடரை முடித்துள்ளோம். எங்கள் வீரர்களை எண்ணி பெருமைப்படுகிறேன். எங்கள் பந்துவீச்சாளர்கள் பந்து வீசிய விதம் மற்றும் மார்க்ரம் பேட்டிங் செய்த விதம் உலகத்திலேயே இல்லாததை போன்று இருந்தது. இந்த பிட்ச் கொஞ்சம் விரிசலான பிட்ச். வெறும் கண்ணால் பார்க்கும் போது நன்றாக இருந்தது. ஆனால், நங்கள் எதிர்பார்த்ததற்கு மாறாக இருந்தது. துரதிர்ஷ்டவசமாக அதனால் பாதிக்கப்படும் இடத்தில் நாங்கள் இருந்துவிட்டோம். எதிர்காலத்திற்கு இது நல்ல படிப்பினை. இந்திய வீரர்கள் போட்டியின் முதல் செஷனில் எங்களை விட திறமையாக செயல்பட்டனர். இதனால்தான் எங்களை 55 ரன்களுக்குள் சுருட்டினர்’’ என்றார்.

The post இந்திய வேகங்களின் அசத்தலான பந்துவீச்சே வெற்றிக்கு காரணம்: கேப்டன் ரோகித்சர்மா பேட்டி appeared first on Dinakaran.

Tags : Rokitsarma ,Cape ,Town ,South Africa ,Speeds' ,Dinakaran ,
× RELATED டி20 உலக கோப்பை தொடருக்காக எய்டன்...